கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 1870ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில், வணிக நோக்கத்திற்காக, புதிய கட்டடம் கட்டப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அந்தக் கட்டடம் நீதிமன்றமாக மாற்றப்பட்டு பல ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அக்கால மக்கள் போக்குவரத்திற்காக அதிகளவில் குதிரைகளையே பயன்படுத்தினார்கள்.
பெயர்க் காரணம்
அதேசமயம் குதிரை வண்டி ஓட்டுபவர்கள், அவர்களின் வண்டிகளில் விளக்கு அல்லது மணிகள் வைத்திருக்காவிட்டால் அவர்களுக்கு இந்த நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்த நீதிமன்றம் குதிரை வண்டி கோர்ட் என மக்களால் அழைக்கப்பட்டது.
இங்குதான் செக்கு இழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வரலாறு கொண்ட நீதிமன்றம் கடந்த 2000ஆம் ஆண்டுவரை செயல்பட்டது. ஆனால் புதிய நீதிமன்றம் கட்டப்பட்டதால் இந்த இடம் பராமரிப்பின்றி பாழடைந்தது.
எனவே பழமை வாய்ந்த இந்த நீதிமன்றத்தை புதுப்பிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
அதன் பலனாக 9 கோடி ரூபாய் செலவில், இதனை மீட்டெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 25 விழுக்காடு பணிகள் முடிந்து, புனரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன.
150 ஆண்டுகள் பழமை
இந்தப் பணி குறித்து தங்கபாண்டியன் கூறுகையில், “எனது தாத்தா காலத்து முதல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களை புனரமைக்கும் பணியை செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது கோயம்புத்தூரிலுள்ள குதிரை வண்டி கோர்ட் கட்டடத்தையும் புதுப்பிக்கின்றனர்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அடிப்படையைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டதோ, அதே முறையில் செங்கல், மணல், சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய் போன்றவை பயன்படுத்தப்பட்டு இந்த கட்டுமான பணி நடைபெறுகிறது.
கட்டடம் எப்படி கட்டப்பட்டதோ அதே முறையில்தான் இப்போதும் கட்டப்படுகிறது. பழைய கட்டடத்தை உயிர்ப்பிக்கும் வழியில் பழமை மாறாமல் மாற்றம் செய்யப்பட உள்ளது” என்றார்.
இதையடுத்து கோயம்புத்தூர் குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் முன்னாள் ஊடகவியலாளர் மீனாட்சி சுந்தரம், “150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கட்டடம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் வணிக நோக்குடன் செயல்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றமாக மாற்றப்பட்டு அனைத்து வழக்குகளும் நடத்தப்பட்டன.
கோயம்புத்தூர் பகுதி அந்தக் காலத்தில் முக்கிய வணிக பகுதியாக இருந்ததால் ஏராளமான குதிரை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது குதிரை வண்டிகள் அனுமதியின்றியும், விளக்குகள் இல்லாமலும் செல்லும்போது காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாகவே இந்த நீதிமன்றத்தை குதிரை வண்டி கோர்ட் என பொதுமக்கள் அழைத்தனர். அதுமட்டுமன்றி பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் டூ சமூக விரோதிகளின் கூடாரம்
இதே நீதிமன்றத்தில் இது போன்று பல ஆயிரம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய நீதிமன்றம் கட்டப்பட்டு, 18 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது.
எனவே இந்த கட்டடம், எந்த ஒரு பராமரிப்புமின்றி சிதிலமடைந்ததன் காரணமாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.
இதனையடுத்து இந்த நீதிமன்றத்தை புதிப்பிக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்ததால் பல வருடங்களுக்கு பிறகு இந்த கட்டடத்தை புதுப்பிக்கும் பணி ஆரம்பித்துள்ளது.
இது கோயம்புத்தூரின் வரலாற்றை காப்பாற்றும் செயல். அது மட்டுமல்லாமல் இந்த நீதிமன்றம் குறித்த என்னுடைய இரட்டையர் வெண்பாவில் ’வண்டி சுமை இழுத்து வாழ்ந்த குதிரைகள் நின்றதாம் அன்றெல்லாம் நீதிமன்றத்தில்’, ’கொண்டவனே செங்கோல் உனை அடிக்க சாட்டை எனை அடிக்க இங்குதான் ஓய்வெடுத்தோம்’ என எழுதியுள்ளேன்” என்று முடித்தார்.
இதையும் படிங்க: ரோபோ தயாரிப்பில் இறங்கிய டெஸ்லா - எலான் மஸ்க்கின் அடுத்த நகர்வு