கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமியின் செல்போன் சிக்னலை கொண்டு சோதனை செய்ததில் அவர் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியிடம் விசாரித்ததில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (20) என்ற இளைஞர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாந்த் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும், ஒரு திருமண நிகழ்வின் போது சிறுமிக்கும் பிரசாந்துக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.