கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63-வது வார்டில் 18 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாடிற்காக துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் 63-வது வார்டு மக்களுக்கு என பிரத்யேகமாக நவீன அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் நாளொன்றுக்கு பொது மக்கள் 20 லிட்டர் தண்ணீர் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: "இதுபோன்ற சுத்திகரிப்பு இயந்திரங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் தொகுதியின் 5 இடங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.கோவை மாநகரில் சாலை வசதிகள் குறித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. சாலை விஷயத்தில் தமிழக அரசு கோவை மாநகராட்சிக்கு துரோகம் செய்து வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மாநகராட்சி தேர்தலின் போது கொலுசு கொடுத்து ஏமாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மக்கள் நிச்சயம் பாடம் புகுட்டுவார்கள். அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை திமுகவினர் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சூயஸ் திட்டம் என்பது 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் என்றும் அதற்காக பொது குடிநீர் குழாய்களை அகற்றினால் மாநகராட்சியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளேன். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை தற்போது நிலவும் தேசிய ஜனநாயக கூட்டணியே தொடரும்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் சந்திரமோகன் உயிரிழப்பு!