கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனை வணிக அதிபர் சண்முகம். கடந்த மூன்றாம் தேதி இவரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொலை செய்து ஈச்சனாரி பகுதியிலுள்ள முள்புதரில் வீசியிருந்தனர்.
உடலைக் கைப்பற்றிய போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், சண்முகத்தை கொலை செய்ததாக மதுசூதனன், சதீஸ், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சதீஷ் மதுக்கரை ஆக்ஸிஸ் வங்கி மேலாளர், மகேஸ்வரன் விற்பனை மேலாளர், மதுசூதனன் இருவரின் நண்பர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விரைவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் 2000 ரூபாய் நோட்டு வாங்கிக் கொடுத்தால் அதற்கு ஈடாக 500 ரூபாய் நோட்டு தருவதாகவும் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ், மனை வணிக அதிபர் சண்முகத்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சதீஷிடம் 4.25 லட்சம் பணத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய சண்முகம், அதற்கு ஈடாக 5 லட்சத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகளை கேரளாவிலுள்ள தனது நண்பர் நவுசாத்திடம் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், வாக்கு கொடுத்ததைப் போல் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக சண்முகத்திடம் கேட்டபோது, கேரள நண்பர் நவ்சாத் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறவே, சண்முகத்தை ஈச்சனாரி பகுதிக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகள் மூவரும் தாக்கியுள்ளனர். பலமாகத் தாக்கியதால் சண்முகம் உயிரிழந்துள்ளார்.
இதனால் மூவரும் செய்தவறியாது அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பியுள்ளனர். இதற்கிடையே, காவல் துறையினர் நவ்சாத்தை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் இருந்த பெண் எரித்துக் கொலை! போலீஸார் விசாரணை