கோவை மாவட்டத்தில் அண்மைக்காலமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக கோவை மாநகர காவல் ஆணையருக்கு தொடர்ச்சியாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து மாநகரில் எங்கெங்கு புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிறது என்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி பகுதியில் ஒரு வீட்டில் குட்கா பொருள்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர் அப்போது 18 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 600 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் இதனை கடைகளில் விற்க திட்டமிட்டிருந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலராம், முல்லாராம், மகேந்திரா ஆகிய மூன்று பேரை கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் கோவை நகரில் இதுபோன்று வேறு எங்காவது வீடுகளில் மறைத்துவைக்கப்பட்டு குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறதா என்பது குறித்தும் அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 100 கிலோ குட்கா காரில் கடத்தல் - இருவர் கைது