கோவை வேலந்தாவளம் சாலை குட்டி கவுண்டன் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(37). இவர், கடந்த மார்ச் மாதம் மாயமானார். இது தொடர்பாக, சமீபத்தில் அவரது தாய், க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
இதில், சிவானந்தாபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேல் என்ற பழனி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து, ஒரு கோடி ரூபாய் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மாரிமுத்துவை கடத்திச் சென்று சிறுமுகை பொகலூர் அருகே கொன்று புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சுந்தர்ராஜ், முத்துவேல், ஈஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சரவணம்பட்டியைச் சேர்ந்த கிரேன் அருண், வசந்த், சிறுமுகை பொகலூரைச் சேர்ந்த சிவா ஆகியோர் கோவை காந்திபுரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல காத்திருப்பதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் தகவல் கிடைத்த இடத்துக்கு சென்ற காவல்துறையினர் அருண், வசந்த், சிவா ஆகியோரை கைது செய்தனர்.மேலும், சிலரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.