தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் சென்று காணும் பொங்கலைக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றால அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அருவிக்கு வனத்துறை வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை வனத்துறையினர் பரிசோதனை செய்து, அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொருள்களை காகிதங்களால் சுற்றிக்கொடுத்து அனுப்பினர்.
ஆனால், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. அருவியில் நீர்வரத்து தேவையான அளவு இருந்ததால், அருவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவிக்கு அருகே வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவித்துக்கொண்டே இருந்தனர்.
இதையும் படிங்க: சுற்றுலாத் துறை சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!