கோயம்புத்தூர்: பாறு கழுகுகளை முன்னர் பிணம் தின்னி கழுகுகள் என்று அழைத்து வந்தார்கள். அந்தப் பெயர் ஓர் எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதாக கருதி பழந்தமிழில் பாறு என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கழுகுகளை பாதுகாத்து, அதன் எண்ணிக்கையை அதிகரித்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானவை. இந்தியாவில் ஒன்பது வகை பாறு கழுகுகள் உள்ளன. இதில் தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை மட்டுமே உள்ளன.
இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. ஒரு காலத்தில், தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட பிணம் தின்னி பறவை இனங்கள், தற்போது சத்தியமங்கலம், மோயார் ஆற்றுப்படுகை, ஊட்டி, முதுமலைக் காடுகளில் மட்டுமே அரிதாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 250 முதல் 300 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் உள்ளது.
கழுகுகளின் எண்ணிக்கை குறைய காரணம் : ’டைகுளோபினாக்’ எனும் கால்நடை மருந்து தான், இந்தியாவில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. ‘டைகுளோபினாக்’ மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடுவதால் இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுவதாக கூறப்படுகின்றன.
இந்த மருந்து 1990 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி 99 சதவீத கழுகு இனங்கள் அழிந்த தருவாயில், மருந்தை பயன்படுத்த அரசு தடை விதித்ததால் கழுகுகள் இறப்பு எண்ணிக்கை குறைந்தன.
இதனை தொடர்ந்து பிணம் தின்னி கழுகுகளை பாதுகாக்க 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் சனிக்கிழமை சர்வதேச பாறுக் கழுகுகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், நகர் பகுதிகளிலும் பாறுக் கழுகுகளின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறுகிறார் கழுகு ஆராய்ச்சியாளரும், அருளகம் அமைப்பின் செயலாளருமான பாரதிதாசன்.
அழியும் தருவாயில் பாறு கழுகுகள்: இது குறித்து அவர் கூறுகையில், "நாம் வாழும் காலத்தில் வெறும் 30 ஆண்டுகளில் ஒரு உயிரினம் அழியும் தருவாயிற்கு சென்றது இதுவே முதல் முறை. மேலும் இதுபோன்று சில மருந்துகளும் பிணம் தின்னி கழுகுகளுக்கு எதிராக உள்ளதால் அதனையும் அரசுகள் தடை செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளால் தான் கழுகுகளில் எண்ணிக்கை குறைந்தது. இதனை அறிவியல் பூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் என ஒரு கூட்டு முயற்சி தேவை.
இது மட்டுமல்லாமல் வனப்பகுதியை ஓட்டி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளை ஊன் உண்ணிகள் தாக்கும் போது உயிரிழந்த கால்நடைகளில் விஷம் தடவுதல் போன்ற காரணங்களால் இந்த அளவுக்கு கழுகுகள் அழிவை சந்திக்கின்றன.
விழிப்புணர்வு அவசியம்: இயற்கையாக உயிர் இழக்கும் கால்நடைகளை அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று வீசினால் கழுகள் மட்டுமின்றி கழுதைபுலி, பன்றிகள் என மற்ற விலங்குகளும் பயன்பெறும். இயற்கையாக உயிரிழந்த விலங்குகள் இவற்றுக்கு கிடைக்கப் பெற்றால் அவை பயன்படும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறையை அரசு ஏற்படுத்த வேண்டும். வாழ்விடத்தை சுருக்கி மிகப்பெரிய அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வரும் பறவைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கை. கழுகுகள் இருந்தால் மட்டுமே வனத்தில் இயற்கையான செயல்பாடுகள் நடக்கும். இல்லை என்றால் உயிரிழந்த விலங்குகள் மூலம் தொற்று நோய்கள் பரவி உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும்" என்று பாரதிதாசன் தெரிவித்தார்.
உணவு சங்கிலியில் இறுதியாக உள்ளது பாறுக் கழுகுகள்: முதுமலை புலிகள் காப்பாக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், "தற்போது அழியும் நிலையில் உள்ள பாறு கழுகுகள், முன்பு ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. முதுமலை புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், வயநாடு சரணாலயம் பகுதிகளில் மட்டுமே தற்போது இந்த பாறு கழுகுகள் காணப்படுகின்றன.
வனப்பகுதியில் உணவு சங்கிலியில் இறுதியாக உள்ளது பாறுக் கழுகுகள். இவை அனைத்து உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. இவை இல்லை என்றால் வனத்திற்குள் உணவு சங்கிலியே இல்லை. பாறு கழுகுகளின் சிறப்பம்சம் வானத்தில் 4 கிலோ மீட்டர் உயரம் பறந்து கொண்டு இருக்கும் போதே தரையில் உயிரிழந்து கிடக்கும் விலங்குகளை கண்டறியும் தன்மை உடையது.
இவற்றை பாதுகாத்தால் எண்ணிக்கை அதிகரிக்கும். பாறு கழுகுகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக கால்நடை மருத்துவர்கள், மாணவர்கள், கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் என அனைவருக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன" என்று தெரிவித்தார்.
முன்னொரு காலத்தில் வானம் எங்கும் இயல்பாக காணப்பட்ட பறவை இனமாக இருந்த கழுகுகள் இன்று அவை இல்லாமல் வானம் வெறிச்சோடி காணப்படுகிறது. உணவு சங்கிலியின் ஒப்பற்ற கண்ணியாக விளங்கும் இவை இல்லாது போனால் வரும் காலத்தில் நமக்கு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க : உத்தரகாண்டில் குதிரை நூலகம்.. மலைகளின் நடுவே சவால்களைக் கடந்து சவாரி!