மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் தங்கவேலுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஜிசிடி அருகில் உள்ள தேர்தல் நடக்கும் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "பல நற்பணிகளைச் செய்த சினிமா பிரியரான தங்கவேலை எனது கட்சியின் வேட்பாளராக அறிமுகம் செய்ததில் பெருமைகொள்கிறேன்.
இதுபோன்ற நல்லவரின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். எங்கள் கட்சியின் பொருளாளர்கள் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இதற்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்கலாம், அதை வருமானவரித் துறையினர்தான் கூற வேண்டும்.
அவசரமாக பல வேலைகளை குறுகிய காலத்தில் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால்தான் ஹெலிகாப்டரில் செல்கிறேன். மற்றபடி பேருந்தில்கூட பயணித்தவன் நான்தான். மற்றபடி ஹெலிகாப்டர் என்பது எனக்குத் தேவையில்லை. எனது பணத்தில்தான் ஹெலிகாப்டரில் செல்கிறேன். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன்.
எனது நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாகவே தடங்கல் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. கல்லூரி மாணவர்களிடம் நான் வந்து பேசிவிடக் கூடாது என்பதற்காகவே பூடகமாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்குத் தோள்கொடுப்பதற்காகவே நான் இத்தனை இடங்களுக்கும் செல்கிறேன். அனைத்துக் கட்சியினரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் எங்களது தேர்தல் அறிக்கை வருவது நல்லதுதான்.
நல்ல விஷயங்கள் மக்களுக்கு கிடைக்க எங்கள் கட்சி முன்னோடியாக உள்ளது. தற்போதுகூட இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக மக்கள் நீதி மய்யம் விளங்க மக்கள் உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அனைவருக்கும் செல்போன், 20 லட்சம் வீடு என்ற அதிமுகவின் அறிவிப்புகள் என்னவானது?' - ஸ்டாலின் கேள்வி