கோயம்புத்தூர்: கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மாலில் உள்ள திரையரங்கில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக, படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் வந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா, "படத்தின் வெற்றி பயங்கரமான சந்தோசத்தை தந்துள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் குறிஞ்சி மலர் எனப் பாராட்டியுள்ளார். அந்த வார்த்தை இது ஒரு அரிய படைப்பு என்பதை காட்டும் வகையில் இருந்தது.
கார்த்திக் சுப்புராஜ் ஒரு அரிய படைப்பாளர். இது அவருடைய கேரியர் பெஸ்ட் படம். இதை மக்கள் கொண்டாடுவதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. 'இறைவி' படம்தான் எனக்கு முதல் முறையாக நடிப்பிற்கான பாதையைப் போட்டுத் தந்தது. அதன் பின்னர்தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.
இந்தப் படத்திற்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். ரஜினிகாந்திடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டை, எனது பிறவியில் கிடைத்த பெரிய பாராட்டாகப் பார்க்கிறேன். அடுத்து தனி ஹீரோ பாதையில் செல்ல உள்ளேன். டைரக்டர் ஆனதே, நடிகராக வேண்டும் என்பதற்காகத்தான். தற்போதைய நிலைக்கு என்னை நானே இயக்க வேண்டும்" என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது ரொம்ப சந்தோஷம். இந்தப் படம் வருவதற்கு முன்பு எனக்கு பதற்றம் இருந்தது. தற்போது கிடைக்கும் வரவேற்பு எனக்கு உற்சாகம் அளிக்கிறது. ஜிகர்தண்டா முதல் பாகம் பலருக்கு பிடித்த படமாக இருந்தது. அதைவிடச் சிறந்த படம் தர வேண்டும் என நினைத்தேன்.
நான் இயக்கிய படங்களில் இதுதான், எனது பெஸ்ட். ஜிகர்தண்டா 1 முடித்தபோது, ஜிகர்தண்டா 2 பண்ணும் எண்ணம் இல்லை. ஆனால் தற்போது, ஜிகர்தண்டா 3வது பாகம் எடுப்பதற்கான சின்ன எண்ணம் உள்ளது. அதை உடனே பண்ணாமல், சில ஆண்டுகளுக்குப் பிறகு பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எல்சியூ (LCU) என்பது எனக்கு பிடித்த விஷயம். அது நல்ல ஐடியா என லோகேஷ் கனகராஜிடம் கூறி இருந்தேன். நான் ஒரே மாதிரி படங்கள் அடுத்தடுத்து பண்ண மாட்டேன். அதனால், கேசியூ என்பது உருவாக வாய்ப்பில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிகர்களின் மனநிலை தற்போது இல்லை" என்று கூறினார்.
அதன் பின்னர் பேசிய ராகவா லாரன்ஸ், “திருச்சி, மதுரை அதனைத் தொடர்ந்து கோவையிலும் படம் ஹவுஸ் ஃபுல்லாக செல்ல காரணமாக இருக்கும் மக்களுக்கு நன்றி. குறிஞ்சி மலர் என படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. அவர் சூட்டிங் போகும் நேரத்தை தள்ளி வைத்து எங்களிடம் படம் குறித்து பேசினார்.
எஸ்.ஜே.சூர்யா உடன் நடித்து பெயர் வாங்குவது கஷ்டம். வெளி இயக்குநர்களுடன் படம் பண்ண வேண்டும் என முடிவு செய்துள்ளேன். இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்தபோதே, இது என் லைஃப் டைம் படம் என்பது எனக்கு தெரிந்தது. இருப்பினும் இது சரியாக வருமா என எனக்கு சந்தேகம் இருந்தது. கார்த்திக் சுப்புராஜின் நம்பிக்கையால் படம் சிறப்பாக வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏப்ரலில் ரஜினி 171 படப்பிடிப்பு - லோகேஷ் கனகராஜ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!