கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணை கோவையில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அண்மையில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (அக் 17) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.17) கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. இதற்காக அவர் நேரில் ஆஜரானார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். உள்ளே சென்றால்தான் என்ன நடக்கப் போகிறது என தெரிய வரும். 1991ஆம் ஆண்டில் இருந்து 2001 வரை ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக இருந்தேன். மேலும், சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியில் வரும் வரை கார்களை பராமரித்தேன். தற்போது எனது சொந்த காரணங்களால் வேலையில் இருந்து நின்று விட்டேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கனகராஜ் 2000க்குப் பிறகுதான் பணிக்கு வந்தார். கனகராஜின் பழக்க வழக்கம் சரியில்லை என்பதாலும், சொல்வதைக் கேட்காமல் இருந்ததாலும் அவரை, ஜெயலலிதா பணியில் இருந்து நிறுத்தி விட்டார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, அவர் என்ன வேலை கொடுத்தாலும் அதனை தட்டாமல் பின்பற்ற வேண்டும். கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எனக்கு தெரியாது.
ஜெயலலிதா இறந்த சமயத்தில் அவரது 5 கார்கள் எனது கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு, சசிகலா சிறைக்கு செல்லும் பொழுது அந்த கார்களை எல்லாம் பார்த்துக் கொள்ளும்படி என்னிடம் தெரிவித்தார். அதனால் 2021ஆம் ஆண்டு வரை பார்த்துக் கொண்டேன்.
மேலும் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் 5 கார்களையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு பணியில் இருந்து விலகி விட்டேன். இந்த கோடநாடு வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே ஊட்டியில் ஆஜராகினேன். அதன் பிறகு தற்பொழுது இங்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் இங்கு வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “திமுக, காங்கிரஸ் மதவாத அரசியலை செய்து வருகிறது” - வேலூர் இப்ராஹிம்