கோயம்புத்தூர்: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் படித்த அரபிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வீடுகளில் என்ஐஏ சோதனை செய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆதாரம் இல்லாமல் இது போன்ற சோதனைகளை செய்து பரபரப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கூட்டாக இன்று (செப்.27) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜவஹிருல்லா, “கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக சமீபத்தில் என்ஐஏ அமைப்பு கோவையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் படித்ததால், அதே கல்லூரியில் பயின்ற மாணவர்கள், வீடுகள், மாநகராட்சி கவுன்சிலர் முபசீரா வீடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் வந்த அதே தினத்தில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
பொதுவாக, அரபி மொழியை மேல்நாட்டிற்கு வேலைக்குச் சொல்வோர், இஸ்லாமியர்கள் அல்லாத பலரும் பயின்று வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் பயின்றவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது போலவும், திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நடவடிக்கைகளை என்ஐஏ மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு முகமை உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சில குண்டு வெடிப்பு சம்பவங்களில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பு இல்லை என தேசிய புலனாய்வு முகமை நிறுவனம் நிரூபணம் செய்தனர். ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய புலனாய்வு முகமை நடுநிலையை தவறவிட்டது.
நல்ல புலனாய்வுத் துறையாக இருந்து அவதூறுகளை களைந்த நிறுவனமாக இருந்தது. பிரகயா சிங் தாக்கூருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டனர். சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர்கள் மோடி ஆட்சியில் மாற்றப்பட்டு, தாக்கூர் விடுதலை மற்றும் பொறுப்புகள் வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும். ஆனால், ஆதாரம் இல்லாமல் அரபுக் கல்லூரியில் படித்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் சமூகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை மிரட்டி நிர்பந்தம் செய்து தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். கோவை கார் குண்டு வழக்கில் அசாரூதீன் என்பவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர் எப்படி கோவை கார் குண்டு வழக்கில் ஈடுபட்டார் அவரை வேறு வழக்கில் ஒப்புக்கொள்ள மிரட்டியுள்ளனர். முடியாது எனக் கூறியதால், கோவை கார் குண்டு வழக்கில் சேர்த்துள்ளனர்.
தற்போது மத்திய அரசு அமலாக்கத்துறை, வருவமான வரித்துறைபோல, என்ஐஏவைப் பயன்படுத்துகிறது. NIA தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் தேசிய புலனாய்வு முகமை பழைய நிலைக்குத் திரும்பி வரும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; இதுவரை 13 பேர் கைது.. சூடுபிடித்துள்ள என்ஐஏ விசாரணை!