கோயம்புத்தூர்: நாளை (ஆக 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “சுதந்திர தினம் என்பது மிக முக்கியமான நாளாகும். கடந்த 74 ஆண்டுகளில் பொருளாதாரம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கலை, விளையாட்டு என பல துறைகளிலும் நாம் பல முன்னேற்ற படிகளை எடுத்துள்ளோம்.
மிகப்பெரிய சவால்
இருப்பினும், நம் நாட்டில் இன்னும் நிறைய பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் உள்ளன. தற்போது, கரோனா தொற்று என்பது நமக்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவாலை வெற்றிகரமாக கடந்து வர மருத்துவ விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி, முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
குடிமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பொறுப்புடன் நடந்து கொண்டால் நாம் இந்த சவாலை விரைவில் கடந்து வர முடியும்.
வளமான மண்ணும் தேவையான நீரும்
இதுதவிர, நம் நாட்டில் மண் வளம் குன்றி வருவது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. நம் உடல் மண்ணில் இருந்து உருவாகியுள்ளது. மண்ணின் வளம் குன்றினால் உடலின் நலமும் குன்றும். ஆகவே, மண்ணை எப்போதும் சத்துமிக்கதாக வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
வளமான மண்ணும் தேவையான நீரும் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த 75ஆவது சுதந்திர தின நாளில் நம் நாட்டை நலமான, வளமான நாடாக உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். நம் நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அடுத்த 26 ஆண்டுகளில் பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். தேவையற்ற புதிய பிரச்சினைகளை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு, இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைவரும் செயல் புரிய செய்ய வேண்டும். அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனத் தெரிவித்துள்ளார்.