கோயம்புத்தூர்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இந்த ஆண்டு 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஒரு பகுதியாக கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள சாமிநாதன் பண்ணையில் மரக் கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி.சண்முக சுந்தரம், அரோமா நிறுவன நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி, சுவாமி அஜய் சைதன்யா, நொய்யல் அறக்கட்டளை மணிகண்டன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, வெள்ளியங்கிரி உழவன் FPO இயக்குநர் கிருஷ்ணசாமி, சிறுதுளி அமைப்பின் பொறுப்பாளர் வனிதா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தாண்டு, தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு ஈஷாவின் 'காவேரி கூக்குரல்' இயக்கம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விழாவில் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் பேசுகையில், “ஈஷாவின் 'பசுமை தொண்டாமுத்தூர்' திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூரில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. இது, பசுமை பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "குறிப்பாக, நொய்யல் வடிநிலப் பகுதிகளிலும், அதில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய அதிகளவு மரங்களை நட வேண்டும். பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதி தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
மேலும், ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிகால் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது என்று கூறியுள்ளனர்.
அதோடு, நொய்யல் உற்பத்தியாகும் சாடிவயல் பகுதியில் முதல் 4 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: அரசின் இலவச தாய் சேய் ஊர்தி: சிகிச்சை பெற்று திரும்பியவர்களிடம் ரூ.2,500 வசூலித்த ஓட்டுநர்!