கோவை ஆர்.எஸ். புரத்தில், மாநகராட்சி கலையரங்கத்தில் இரும்பு வணிகர்கள் சங்கத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “இரும்பு வணிகம் என்பது இந்தியாவில் வர்த்தக ரீதியாகவும், மனிதர்களின் மாற்றத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளது. அதிமுக அரசு அதனை வரவேற்கிறது, இரும்பு வணிகர்களுக்கு என்றும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்” என்றார்.
அதன்பின் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “இரும்பு என்பது அனைத்து தொழில் துறைக்கும் உதவக்கூடியது. இந்த 75ஆம் ஆண்டு பவள விழா இத்துடன் முடிவடையாமல், நூறாவது ஆண்டு விழாவையும் கொண்டாட வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகத்தை போலவே, தெலங்கானாவிலும் ஜெயலலிதா நினைவாக, பச்சை நிறப் பெட்டியிலேயே தெலங்கானா அரசு பிறந்த குழந்தைகளுக்கான பரிசு பெட்டியை வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஜெ. ஜெயலலிதா எனும் நான்' - தயக்கத்திலிருந்து மீண்டு இரும்பு மனுஷியாய் உருவெடுத்தவரின் கதை