கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் முகாம் உள்ளது, தமிழ்நாடு - கேரளா எல்லையில் வனத் துறையினர் தொடர்ந்து காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்துவருகின்றனர்.
இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள்பட்ட கல்லார் பிரிவு இட்லியாறு பட்டை கிராம்பு காடு சரகத்தில் மூன்று வயதான ஆண் யானை காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளது.
வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்ததன்பேரில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத் துறையினர், கால்நடை மருத்துவர் மெய்யரசன் ஆகியோர் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.
வனச்சரகர் மணிகண்டன் கூறுகையில், காலில் அடிபட்ட காட்டு யானைக்கு முதல்கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.