தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுபுணி ஆகிய பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, எரிசாராயம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மத்திய புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு, பொள்ளாச்சி அருகே நெகமம் ஜல்லிபட்டி பகுதியிலுள்ள தோட்டத்து வீட்டில் காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 333 கேன்களில், சுமார் 11 ஆயிரத்து 655 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த எரிசாராய கேன்களை பறிமுதல் செய்த காவலர்கள், வீட்டின் உரிமையாளரான தமிழ் முரசு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்டில் வாட்டர் விற்பனை செய்வதாக கூறி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையைச் சேர்ந்த பிரபு மற்றும் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் தமிழ் முரசு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து எரிசாராயத்தைக் கடத்த முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாகவுள்ள பிரபு மற்றும் சரவணன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சென்னையில் குடியரசுத் தலைவர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி மோசடி' - இளைஞர் கைது!