கோயம்புத்தூர்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுகவின் இரும்புக்கோட்டை கோவை என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கோவை மாவட்டம் திமுகவின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சியைக் கைப்பற்றிய திமுக கூட்டணி 33 பேரூராட்சிகளில் 32 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதிமுக செல்வாக்கு மிகுந்த மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் அதிகபட்சமாக, 81 விழுக்காடு வாக்குப் பதிவானது. இது இந்தப் பகுதியில் ஆளும் கட்சியின் மீது உள்ள எதிர்ப்பையும், சுயேச்சை வேட்பாளர்களின் மீது உள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகத் தேர்தலுக்குப் பின் பேசப்பட்டது.
பொதுமக்கள் ஆதரவு
அந்த வகையில் தேர்தல் முடிவில் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் ஐந்து வார்டுகளில் திமுகவும், 10 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக ஒன்பது வார்டுகளில் மாற்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உயிர் என்ற தன்னார்வு அமைப்பினர், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு முழுக்க முழுக்க பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதரவு அளித்துள்ளனர்.
உயிர் அமைப்பினர் வெற்றி
இதுகுறித்து மோப்பிரிபாளையம் பேரூராட்சி மக்கள் கூறுகையில், "மாற்றம் என்ற பெயரில் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சசிக்குமார் என்பவர் பொதுமக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ளார். கரோனா காலத்தில் நண்பர்களுடன் இணைந்து அவர் உதவிகள் செய்துள்ளார். எந்த அரசியல் கட்சியும் எங்களுக்கு உதவவில்லை. இதற்கு முன் 20 ஆண்டுகளாக அதிமுகவினர் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், எங்கள் குறைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை. மக்களுக்காக உழைக்கும் உயிர் அமைப்பினர் வெற்றி பெற நாங்கள் ஒற்றுமையாக முடிவெடுத்து பரப்புரை செய்தோம்.
சிறுவர் பூங்கா
அவர்கள் வெற்றி பெற்றுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த சுயேச்சை வேட்பாளர்கள் மோப்பிரிபாளையம் பகுதியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ’கரிசை’ வனம் என்னும் பெயரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர்.
இதுதவிர குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளனர். மக்களின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் மோப்பிரிபாளையம் தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டுள்ளன" என்றனர்.
விண்ணப்பித்த ஒரே நாளில் குடிநீர்
இதுகுறித்து உயிர் அமைப்பின் நிறுவனரும் மாற்றத்திற்கான அணியின் தலைவருமான சசிக்குமார் கூறுகையில், "கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளோடு பயணித்த நிலையில், அதிலிருந்து விலகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உயிர் அமைப்பு தொடங்கப்பட்டது.
இதற்கு இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்ததால், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு அணியாகப் போட்டியிட முடிவு செய்து, மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 14 இடங்களில் போட்டியிட்டு 9 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு என்னென்ன தேவை உள்ளதோ அதனை உடனடியாக நிறைவேற்ற உள்ளோம். பேரூராட்சியில் மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் காற்றாலை மின்சாரம் நிறுவப்படும். மின் மயானம் அமைத்தல், விண்ணப்பித்த ஒரே நாளில் குடிநீர் இணைப்பு வழங்குதல், கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்டவற்றை எளிதாக்குவது எங்களுடைய நோக்கம்" என்றார்.
ஸ்ரீ சாய் சமூக சேவை மையம்
மேலும் மாற்றத்திற்கான அணி மட்டுமல்லாமல் மோப்பிரிபாளையம் 1-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மைதிலி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் அப்பகுதியில் ஸ்ரீ சாய் சமூக சேவை மையம் என்ற பொது நல அமைப்பை நிறுவி அப்பகுதியில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். ஊருக்கு உழைத்தால் மக்கள் உயர்வான இடத்தில் வைப்பார்கள் என்பதற்கு கோவை மக்கள்தான் சான்று போல..!
இதையும் படிங்க: வற்றாத நதியின் மடியில் வாழ்ந்தும் நீர் இல்லை: நெல்லை சாலையில் பெண்கள் மறியல்