கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் முதல் முறையாக ஏராளமானோர் வாக்களித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏற்கனவே மின்னணு இயந்திரத்தில் வாக்களித்துள்ள நிலையில் தற்போது வாக்குச்சீட்டுகள் முறையில் வாக்களித்தது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் கண்டு வாக்களிக்க முடியும். இதில் நான்கு வர்ண சீட்டுகளை வாங்கி அதில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு முத்திரையிடுவது சற்று சிரமமாக இருந்தது, என்றனர்.
இதனிடையே மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வெயிலில் இருந்து பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு வாக்குச்சாவடிகளில் இந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பந்தல் அமைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் அபாயகரமான வகையில் இருந்ததால், அதில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க குளியலுக்கு பயன்படுத்தும் மக்கை வைத்திருந்தனர்.
வாக்களிக்க வருபவர்கள் தவறி கம்பி மேல் விழுந்தால் அவர்களைப் பாதுகாக்கவும் பல வண்ணங்களில் இந்த மக் வைக்கப்பட்டதால் கம்பிகளை பார்த்து வாக்காளர்கள் கவனமுடன் வருவார்கள் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை - அமைச்சர் கடம்பூர் ராஜு