கோயம்புத்தூர்: கோவை புறநகரில் திமுக பிரமுகருக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் மற்றும் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் கட்டுமான நிறுவனங்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் பல இடங்களில் இன்று (ஜனவரி 02) மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் உள்ளிட்ட 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜனவரி 02) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டணம் பகுதியில் ரியல் வேல்யு ப்ரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் திமுகவைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானவரித் துறையினர் வந்த காரில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்களை ரியல் வேல்யு ப்ரொமோட்டர்ஸ் அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்றுள்ளனர். அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, ரியல் வேல்யு ப்ரமோட்டர்ஸ் உரிமையாளர் ராமநாதன் மகன் சொர்ண கார்த்திக் இல்லம் மற்றும் ரியல் வேல்யூ ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று, கோவை அண்ணாசிலை அருகே உள்ள கோவையில் எல்லன் இன்டஸ்டிரிஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜப்பானில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் தீ விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!