கோயம்புத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர், வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார். மேலும் கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி சர்மிளா, கோவை மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.
அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை பெற்றால், இவர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என பேசப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய போதும், சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
![எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு; சந்திரசேகரின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15803754_spvelumani.jpg)
இதில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாநில அரசு சார்ந்த துறையாக இருக்கும் சூழலில், மத்திய அரசின் கீழ் வரும் வருமான வரித்துறை சந்திரசேகர் வீட்டில் கடந்த 6 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்திரசேகர் வீடு மட்டுமின்றி, அவரது தந்தையின் இல்லம், அவர் தொடர்புடைய கேசிபி நிறுவனம், ஆலயம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சந்திரசேகரின் வீட்டில் 13 மணி நேரம் நீடித்த இந்த சோதனை, அன்றிரவு 12.30 மணிக்கு முடிவடைந்தது . இதனையடுத்து சந்திரசேகர் தொடர்புடைய கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனம், அந்த நிறுவனத்தின் இயக்குனர் சந்திரபிரகாஷ் வீடு, ஆலயம் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் விசாரணை தொடர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கும் மேலாக இந்த இடங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.
கேசிபி நிறுவனம் தொடர்பான விசாரணையின் போது, நிறுவனத்தின் இயக்குனர் சந்திர பிரகாஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அலுவலர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பின்னர், எவ்வித சிக்கலும் இல்லை என அறிக்கை பெற்ற பின்னர்தான் மீண்டும் விசாரணையை தொடங்கினர்.
கடந்த ஆறு நாட்களாக சந்திரபிரகாஷ் வீடு, ஆலயம் அறக்கட்டளை, கேசிபி நிறுவனம் ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த சோதனை, இன்று (ஜூலை 12) காலை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரர் இல்லத்தில் ரெய்டு