கோயம்புத்தூர்: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அருகே மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும், அருகே உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வந்த மக்னா காட்டு யானையை, பொள்ளாச்சியை அடுத்த கோழிகமுத்தி முகாமில் இருந்து கும்கி யானை சின்ன தம்பி மற்றும் குழுவினர் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மயக்க ஊசி செலுத்தி, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பிடிக்கப்பட்டது.
இதன் பின்னர், பிடிபட்ட மக்னா யானை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் அடர் வனப்பகுதியில் பிப்ரவரி 6ஆம் தேதி விடப்பட்டது. மேலும், வனத்துறை அதிகாரிகள் தனிக் குழு அமைத்து, ரேடியோ காலர் பொருத்தி, அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்தனர்.
ரேடியோ காலர் பொருத்தப்பட்ட நிலையில் மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி கடந்த மூன்று மாதங்களாக பொள்ளாச்சி வனச்சரகம் தம்பம்பதி மலை அடிவாரப் பகுதிகளில் நடமாடி வருகிறது. மேலும், கடந்த சில தினங்களில் மக்னா காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தம்பம்பதி வழியாக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட மாமரங்கள், 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து, விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கும்கி யானைகள் ராஜ வரதன் மற்றும் சுயம்பு என இரண்டு யானைகளை வைத்து வனத் துறையினர் மக்னா யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 30) தேவராஜ் என்பவரது தோட்டத்து கேட்டையும், அவரது தோட்டத்து வீட்டின் முன்பு இருந்த வாழை மரத்தையும், பாகற்காய் தோட்டத்து கம்பி வேலிகளையும் மக்னா யானை சேதப்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
மக்னா காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்றும், இல்லை என்றால் கும்கி யானையாக மாற்ற வேண்டும் என வனத்துறையினருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 5,800 பேருக்கு சாப்பாடு... உலகின் பெரிய உணவகம்... எங்க இருக்கு தெரியுமா?