கோயம்புத்தூர்: பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று (ஜூன் 24ஆம் தேதி) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் அப்போது பேசிய அவர், ''வித்தைக்காரன் படப்பிடிப்பு கோவையில் நடந்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கோவைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கரும்பலகையைப் பார்க்கும்போது, யார் பேசினார்கள்... எழுதி வையுங்கள் என்று சொன்னால் அதில் என் பெயர் தான் இருக்கும், கரும்பலகையைப் பார்த்தால் இப்பொழுதும் பயம் வரும், அவ்வப்போது கனவில் தேர்வு எழுவதுவது போல் தோன்றுவதால் அதிர்ச்சியில் எழுந்து அமர்வேன்.
படிக்கும்போது எந்த விதமான தவறான விசயத்திலும் ஈடுபட வேண்டாம். மது, புகைப்பழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும். ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும்போது ஆசிரியருக்கு பயப்படுவோம். இப்போது நிறைய வீடியோக்களில் மாணவர்கள் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதைப் பார்க்கும் போது வேதனையளிக்கிறது'' என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
திரைப்பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், ''நாய்சேகர் படத்திற்குப் பிறகு, சட்டம் என் கையில் என்ற படத்தை முடித்து உள்ளோம். இது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குநர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது.
ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது. அது நல்ல தொழிலாக இருக்கிறது. இருந்தாலும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக உள்ளது. இந்த மென்பொருள் உருவாகி இருப்பது கரோனோவிற்கு பிறகான காலகட்டத்தில் நல்ல வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் சிகரெட் தொடர்பான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கிறார்கள். திரைபடங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும், விஜய்யுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என படித்தால் நல்லது தானே. இன்னும் விஜய் மாணவர்களுக்கு உதவும் இதுபோன்று திட்டங்களை செய்வார்''என்றார்.
மாமன்னன் இசைவெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, ஜெயம் ரவி கூறியது போல் தானும் தூங்கிவிட்டேன் எனக் கூறியதோடு, ''கருத்து பகிரப்பட்டதை தான், ஒரு பார்வையாளனாக பார்க்கிறேன். தேவர் மகன் திரைப்படம் எனக்கு மிகவும் படித்த படம் , படத்தின் இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களைப் பார்க்காமல் குழந்தைகளை படிக்கவையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன். மாரிசெல்வராஜ் எழுதிய கடிதத்தை படிக்கவில்லை'' எனவும் நடிகர் சதீஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: CCTV Footage: குடியிருப்புக்குள் நுழைந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!