கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் தடாகம் சாலையில் ஜிசிடி முதல் டிவிஎஸ் நகர் வரை குடிநீர் குழாய் உட்பட பல்வேறு பணிகளுக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் 1 வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அந்த பணிகளால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் ஒரு வருட காலத்திற்கு மேலாக இவ்வழியைப் பயன்படுத்தாமல் மாற்று வழியைப் பயன்படுத்தி வந்தனர். மேலும், கோவை மாநகரில் தடாகம் சாலை முக்கியமான சாலையாக இருந்து வரும் நிலையில், ஒரு வருட காலத்திற்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் ஜிசிடி முதல் இடையர்பாளையம் வரையிலான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறைவடைந்து புதிதாக தார் சாலைகள் போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது ஜிசிடி முதல் இடையர்பாளையம் வரை புதிதாகப் போடப்பட்ட தார் சாலைகள் ஆங்காங்கே விரிசல் விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகையால் தற்பொழுது மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிகளை பெயர்த்தெடுத்து மீண்டும் அந்த இடங்களில் எல்லாம் புதிதாகச் சாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாலைகளுக்கு நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் மாநகராட்சி நிர்வாகத்தின் செயலைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சாலைகளைப் போடும் பொழுதே தரமானதாகப் போட்டிருக்க வேண்டும் எனவும், இவ்வாறு செய்வதால் நேரம் வீணாவதோடு, பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதாகவும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.