கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டன. இதன் எதிரொலியால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக கேரளா எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்கள் சித்திக், ரம்யா, கோவிந்தராஜ், சரவணன், ரம்யா, கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர ஆய்வுக்குப் பின்னர், டயர்களில் கிருமி நாசினி தெளித்து தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர். இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது, பறவை காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர ஆய்விற்கு பிறகே தமிழ்நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கப்டுகின்றன. மேலும் வாகனங்களின் டயர்களில் பொட்டாசியம் பெர்மாங்கனேட், சோடியம் பை கார்பொனேட், சோடியம் கார்பொனேட், சோடியம் குளோரைட் ஆகிய ரசாயன மருந்து கலவை தெளிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 6 மணி முதல் 2 மணி வரை ஒரு குழுவினரும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு குழுவினரும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒரு குழுவினர் என அனைத்து சோதனைச் சாவடிகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என்றனர்.