கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு உள்ளார்.
ஆய்வாளர் சபரிநாத் விடுமுறை நாட்களில் அவ்வப்போது இங்கு வந்து தங்கி இருப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது வீட்டிற்கு வரும் சபரிநாத்துக்கு கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை ஆய்வாளர் சபரிநாத் தன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் கீழ் குடியிருந்து வந்த 37 வயதான சாந்தி சமையல் செய்வதற்காக சபரிநாத் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சபரிநாத் வீட்டில் திடீரென பயங்கர சத்தம் கேட்டு உள்ளது.
பயங்கர சத்தம் கேட்டதும் கீழ் வீட்டில் குடியிருக்கும் சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்த போது, சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோர் உடல் முழுவதும் தீ பிடித்து கத்தியுள்ளனர். இருவரும் தீயில் எரிவதை கண்டு சாந்தியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: "அதிமுகவை அழிக்க கைக்கூலியாக இருக்கிறார் ஈபிஎஸ்" - நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு!
பின்னர், சாந்தியின் உறவினர்கள் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கும், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், காவல் துறை ஆய்வாளர் சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோ இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாந்தி மற்றும் சபரிநாத் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்த குளிர் சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளார் சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக அரசு ஆராய வேண்டும் - அண்ணாமலை கருத்து