கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்று காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட வடுகபாளையம் இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி, இவரது கணவர் சிவசாமி தனது மனைவிக்கு ஆதரவு கேட்டு வாக்குச் சேகரிக்கும்போது பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம் செய்துகொண்டிருந்தார்.
இதையடுத்து தகவலறிந்த பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் அதிமுகவினர் ஹாட் பாக்ஸ் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடித்தனர்.
இது குறித்து, பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்பொழுது, திமுக வேட்பாளர் கணவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டுமெனவும் இதுபோல பொள்ளாச்சியில் உள்ள 36 வார்டுகள் பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது. இதற்குச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.