கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஸ்ரீரங்கராயன் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(22). கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தர்ஷினி பிரியா என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கனகராஜின் அண்ணன் வினோத்குமார், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காதலர்கள் இருவரும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிப்பாளையம் பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கனகராஜின் சகோதரர் வினோத் குமார் காதலர்கள் இருவரையும் அரிவாளால் சராமாரியாக வெட்டினார். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தர்ஷினி பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த வினோத் குமாரைத் தேடிவந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலனை ஆவணைக் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவக் கொலைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அவை தொடர்வது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.