சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காச நோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இதுநாள் வரை 25,14,228 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,54,704 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 35,68,932 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 13 முதல் ஒரு வார காலத்தில் 315 கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 24,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்பொழுது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 90 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 044-25384520 மற்றும் 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்தால், அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கரோனா தொற்றின் மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு மாநகராட்சி இத்திட்டத்தை மும்முரப்படுத்தி உள்ளது.