உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது.
கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கை கடுமையாக்கி உள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று(ஜூலை.26) ஊரடங்கின் போது தடாகம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிலைகள், சுவர்கள் போன்றவற்றின் மீது அனுமதியின்றி வேல் சின்னத்தை சிலர் வரைந்து வந்துள்ளனர்.
இது அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இன்று(ஜூலை.27) ரோந்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டபோது குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் சின்னம் வரைந்துக் கொண்டிருந்த சிலரை கண்டுள்ளனர்.
அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் பெயர் குருபரன், அருண்குமார், சிவகணேஷ், சந்தோஷ், அக்ஷயவர்மா என தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அவர்கள் ஐந்து பேர் மீதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடையை மீறி வெளியே சுற்றுதல், பொது நிலத்தை அபகரித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, அந்த ஐவர் கைது செய்யப்பட்டதை அறிந்த இந்து அமைப்பினர், குனியமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை செயலாளர் சிவலிங்கம், தன் மேல் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். அப்போது, அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவரையும் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்து அமைப்பினருக்கும் காவல் துறையினருக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன்பின் கைது செய்யப்பட்ட அவர்கள் ஐந்து பேரையும் காவல்துறையினர் பிணையில் விடுவித்தனர். இந்து அமைப்பினரின் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.