கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம், பல வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். நேற்று மாலை அவர் அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த ஒருவர், ஜீவானந்தத்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தராததால் கத்தியை காட்டி மிரட்டி ஜீவானந்தம் சட்டைப் பையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக ஜீவானந்தம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் பணம் பறித்து சென்றவர் சூலூர் பகுதியை சேர்ந்த சிவ மணிகண்டன் என்பதும், இந்து முன்னேற்ற கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவ மணிகண்டன் ஆட்டோ டிரைவர் ஜீவானந்தத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜீவானந்தம் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.