கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சகர்பானு. இவரது கணவர் பைசல், திமுக கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற பணிகளில் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அம்பராம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கடை இயக்க ஏலம் நடத்தப்பட்டது. அந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சகர்பானு கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அவரது கணவர் பைசல் கலந்துகொண்டு, இறைச்சிக் கடை ஏலத்தை நடத்தியுள்ளார்.
இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக அம்பராம்பாளையம் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரனுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அனுப்பியுள்ள நோட்டீஸில், பெண் பிரதிநிதியின் கணவரோ, அவரது குடும்பத்தினரோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் இருக்கையில் அவரது கணவர் அமர்ந்து அதிகாரத்தை செயல்படுத்த எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கைதிக்கு கரோனா; மூடப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம்