கோயம்புத்தூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் டிஐஜி விஜயகுமாரின் மரணம் எனக்கு வருத்தத்தைத் தருகிறது. அவர் அந்த முடிவு எடுத்திருக்கக் கூடாது. அவருக்கு எதன் அடிப்படையில் மன அழுத்தம் வந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
காவலருக்கு ஒரு சங்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதேபோல் அரசியல் அழுத்தமும் காவல் துறைக்கு அதிகம் உள்ளது. அவர்களை சுதந்திரமாக செயல்படாமல் விடுவதே ஒரு மன அழுத்தம்தான். தற்கொலைக்கு ஒரு தூண்டல் இருக்கும், அது என்னவென்று விசாரிக்க வேண்டும்.
இதே மனநிலையில் பல காவல் துறை அதிகாரிகள் இருக்கலாம். குறிப்பாக நானே இரண்டு மாநில பிரச்னையும் பிரஷர் (preasure) இல்லாமல் கடந்து போகிறேன். வாழ்க்கையில் pleasure இருக்கலாம், ஆனால் pressure இருக்கக் கூடாது” என சிரித்தபடி பதில் அளித்தார். ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்ற எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆளுநருக்கு போஸ்டர் ஒட்டி கண்டிக்க கூடிய போஸ்ட்டிங் கிடையாது. ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது?
ஆளுநர்கள் அரசியல் பேசலாம். அரசியல் இல்லாமல் எதுவும் கிடையாது. அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும்போது, ஆட்சித் தலைவர்களும் அரசியல் பேசலாம். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை பேசினால் அது அவருடைய கருத்து. நீங்கள் சொன்னதைத்தான் ஆளுநர் பேச வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேபோல் என்னை எதிலும் அடைக்க முடியாது” என்றார். மேலும், எனக்கும் புதுச்சேரி முதலமைச்சருக்கும் அண்னணன் - தங்கை உறவு தான் என்றும், புதுச்சேரியில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் தொடர் விமர்சனம் செய்வதாக தெரிவித்தார். அதேபோல், புதுச்சேரி புதுமையாகி கொண்டிருப்பாதகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: "99% பெண்களுக்கு உதவி தொகை போய் சேர வாய்ப்பே இல்லை" - கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி!