கோயம்புத்தூர்: பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் ரத்ததான முகாம் இன்று (செப். 26) நடைபெற்றது. இதை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளாக முதலமைச்சர் அறிவித்தார். பெரியார், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார்.
ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. தற்போது அரசு பணிகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 40 விழுக்காடாக உள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான கட்டடங்களை ஆய்வு செய்ததில் பல கட்டடங்கள் மிகவும் மோசமான நிலையிலும், சுற்றுச்சுவர் இல்லாமலும் இருக்கிறது. இதனை சரி செய்வதற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 112 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதி ஏற்படுத்த உள்ளோம்.
15 லட்சம் தடுப்பூசி
பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இன்று 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அதிகமான தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் " என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் அமைச்சருக்கு பெரியார் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ’ரயில்வே பணி நியமன உத்தரவை திரும்பப் பெறுக’ - சு. வெங்கடேசன் எம்பி