கோவை - சுளீஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி, மணிகண்டன் தம்பதியினருக்கு கடந்த 13ஆம் தேதி காலை 11 மணியளவில் இரண்டாவது ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது. அந்தக் குழந்தையை பரிசோதித்தபோது ஆசனவாய் இல்லாமல் குழந்தை பிறந்து இருப்பது தெரிய வந்தது.
அந்தக் குழந்தைக்கு ஆசனவாய் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று பரிசோதனை செய்யவும் அறுவை சிகிச்சை செய்யவும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு குழந்தையை அனுப்பினர். துரதிர்ஷ்டவசமாக குழந்தையின் தந்தையான ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மாரடைப்பின் மூலமாக 14ஆம் தேதி இறந்து விட்டார். அதனால், இந்தக் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று கருதி, அந்தக் குழந்தையின் தந்தையினுடைய உறவினர்கள் குழந்தையைக் கோவை மருத்துவக் கல்லூரியில் விட்டுச் சென்றனர்.
பிறகு குழந்தையின் தாய் வழி உறவினர்கள் கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து அந்த குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முன் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் அவர்களின் உதவியோடு நேற்று இரவு குழந்தையை, தனியார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்று ஸ்கேன், எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் உடல் வளர்ச்சி குறைவாக இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், ஆசனவாய் உருவாக்கும் முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து குடலை வயிற்று வழியாக வைத்து ' கொலாஸ்டமி' என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குழந்தைகள் நலப் பிரிவின் தலைவர் மருத்துவர் ரங்கராஜன், மருத்துவர் சிவசங்கர், மகப்பேறு மருத்துவர் மருத்துவர் ஜோதிகலா குழுவினருடன் அறுவை சிகிச்சை சனிக்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. அதன்பிறகு பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பகுதியில் குழந்தைகள் நல நிபுணர்கள் பாதுகாப்பில் குழந்தை நல்ல நிலையில் உள்ளது.
சிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்து குழந்தையைக் காப்பாற்றிய, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குக் குழந்தையின் உறவினர்கள் அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!