கோயம்புத்தூர்: சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார். இவர் காளப்பட்டி பகுதியில் 'அல்பா போரெக்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதில் 1 லட்சம் முதலீடு செய்தால் 8 முதல் 20 சதவீதம்வரை வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு விமல்குமார் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் விமல்குமார், அவருடைய மனைவி ராஜேஸ்வரி, சகோதரர் சந்தோஷ்குமார், அருண்குமார், கவிதா என்ற கங்காதேவி, யுவன், சுஜித் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (32), கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டேன்பிட்) இன்று (ஜூன் 8) சரணடைந்தார்.
அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அருண்குமார் பலரிடம் பணம் வசூலித்து கொடுக்கும் ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இந்த வழக்கின் முழு தகவல்களை அறிய, அருண்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கந்து வட்டி கொடுமை - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்