கோயம்புத்தூர்: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மரங்கள், செடிகள் குறித்தும் மர இனங்களை பெருக்குவது குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் செடிகள் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது. பூச்சிகளை கண்டறிந்து ஆய்வு செய்வது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்திய வனப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மரங்களின் தன்மையை கண்டறியும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு எழுதியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது பிப்ரவரியில் நடைபெற்ற பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வில் 4 பேர் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஹரியானா மாநிலத்தை சார்ந்த அமித்குமார் (30), அமித்குமார் (26), அமித் (23), சுலேமான் (25) ஆகியோர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆள் மாறாட்டம் செய்ததற்காக அவர்கள் 4 பேர் மீதும் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து 3 பிரிவுகளில் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.