கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை கருமுட்டியில் மலைவாழ் மாணவி ஸ்ரீதேவி என்பவர் கேரளாவில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் 24ஆம் தேதி கரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுதியிலிருந்த ஸ்ரீதேவியால் தனது வீட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அடிச்சர் தொட்டியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
ஊரடங்கு தளர்வையடுத்து கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அலுவலர்கள் உதவியுடன் சாலக்குடி பள்ளிக்குச் சென்று ஸ்ரீதேவி தேர்வு எழுதினார். பின் கருமுட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். தேர்வு முடிவுகளில் ஸ்ரீதேவி 'ஏ பிளஸ் கிரேடு தேர்ச்சி பெற்றார்.
இது குறித்து தகவலறிந்த ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கிய சேவியர் ராஜ், ஸ்ரீதேவிக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர், ஸ்ரீதேவிக்கு சமூக ஆர்வலர் மூலம் மடிக்கணினி, சூட்கேஸ், துணிகளை வழங்கினார்.