கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனித-விலங்கு மோதல் காலங்காலமாக நடைபெற்றாலும், தொடர்ச்சியான யானைகளின் மரணங்கள் சமீபத்தில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக கோவை மண்டல கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “கோவை வனக் கோட்டத்தில் இதுவரை 14 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. யானைகள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனால், இது தவறாகச் சித்தரித்து பிரச்சாரம் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு யானையின் மரணம் குறித்தும் முறையான விசாரணை, ஆய்வு நடத்தப்படுகின்றது. யானைகளின் மரணம் குறித்து மறைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
கோவையில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 14 யானைகள் உயிரிழந்துள்ளன. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 84 யானைகளும், 2019ஆம் ஆண்டு 108 யானைகளும், 2020ஆம் ஆண்டு இதுவரை 60 யானைகளும் உயிரிழந்துள்ளன. வறட்சி, போதுமான உணவின்மை, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் யானைகள் உயிரிழப்பு நேர்கிறது. கோவை வனக் கோட்டத்தில் ஒரே ஒரு யானை மட்டும் இயற்கைக்கு மாறாக உயிரிழந்துள்ளது. மற்றவை அனைத்தும் இயற்கையான உயிரிழப்புதான்.
கடந்த ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 14 யானைகள் உயிரிழந்துள்ளன. நேற்று தலைமை வனப்பாதுகாவலர் அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் வனத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். யானைகள் உயிரிழப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தும்.
குறிப்பாக, சிறுமுகை பகுதியில் அதிகளவு யானைகள் உயிரிழப்பது தொடர்பாக இந்தக் குழு ஆய்வுசெய்யும். மேலும் வனப்பகுதியில் யானைகளுக்குத் தேவையான உணவினைக் கொடுக்கவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கோவை வனக் கோட்டத்தில், ’ 10 நாள்களில் 12 யானைகள் மரணம்’ என்ற தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இதுபோன்ற தவறான தகவல்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன. இப்படி தவறான தகவல்களைப் பரப்ப முயலும்போது, ஊடகங்கள் வனத்துறை அலுவலர்ளிடம் உறுதிப்படுத்திவிட்டு, செய்தி வெளியிட வேண்டும். சிறுமுகை, பவானிசாகர், நீர்ப்பிடிப்புப் பகுதி உள்பட சில இடங்களிலிருந்து தண்ணீர் பரிசோதனைக்கு எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. தண்ணீரில் ரசாயனம் ஏதாவது கலக்கப்பட்டு இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார், கோவை மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மைக் குறித்துக் கேட்டதற்கு, “சில விஷமிகள் இதுபோன்ற தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்புவதினால் வனத்துறையினரின் நேரம் வீணடிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களப் பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நேற்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை வனக் கோட்டத்தில் யானைகள் மரணம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். விஷமிகள் (Fringe elements) என்று முன்னாள் அமைச்சரைக் குறிப்பிடுகிறீர்களா, என்ற கேள்விக்கு வனத்துறை அலுவலர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: போட்ஸ்வானாவில் தொடரும் பேரழிவு - 275க்கும் அதிகமான யானைகள் உயிரிழப்பு!