கோயம்புத்தூர்: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குள்பட்ட சுகுணாபுரம், கோலமாவு மலை பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்திவந்த சிறுத்தை, ஜனவரி 17ஆம் தேதி குனியமுத்துார் பி.கே. புதுாரில் உள்ள ஒரு பழைய குடோனில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுவைத்து அதில் இறைச்சி வைத்தனர். முதல்நாள் முயற்சி வெற்றிபெறாத நிலையில், நேற்றும் சிறுத்தையைப் பிடிப்பதற்கான பணி தொடர்ந்தது. இருப்பினும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்குக் காட்டிவருகிறது.
மின் விளக்குகள் அமைத்து இரவு நேரத்தில் சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடந்தது. குடோனில் சிறுத்தையின் நடமாட்டங்களைக் கண்காணிக்க, ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டது. ட்ரோன் கேமரா பழைய கழிவுப்பொருள்களில் சிக்கிக் கொண்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி
இதையடுத்து 10 அடி உயர கம்பத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சிசிடிவி கேமராக்களில் இன்று (ஜனவரி 19) அதிகாலை சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
அந்தக் காட்சிகளை வனத் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமராவை உற்றுப் பார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டுத் திரும்புவதும் பதிவாகி உள்ளது.
குடோன் பாழடைந்த நிலையில் உள்ளதால் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதில் சிக்கல் உள்ளது எனவும், அதனால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்கும் திட்டம் இல்லை எனவும் கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சிறுத்தையைப் பிடிக்கும் பணி தொடர்கிறது. சிறுத்தை விரைவில் கூண்டில் சிக்கும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் - சு. வெங்கடேசன்