கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆழியாறில் குடியிருப்புக்குள் புகுந்த மலைபாம்பை பிடிக்க வனத்துறை, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து வராததால் பொதுமக்களே பிடித்தனர்.
இந்நிலையில், இருதுறை அலுவலர்களுக்கு இடையே பாம்பை யார் பிடிப்பது என்பது குறித்த பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் பாம்பு பிடிப்பது தொடர்பாக பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமைதாங்கி பேசினார்.
அப்போது அவர்,எல்லா பகுதிக்கும் சென்று பாம்பை பிடிப்பது என்பது சிரமமானது. பொதுமக்கள் தகவல் தெரிவித்த உடனே வனத்துறை வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஆட்கள் வருவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை வனஉயிரின பாதுகாப்பு அறக்கட்டளையினர் பயிற்சிகள் பெற்று, கோவையில் பாம்புபிடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களை பொள்ளாச்சி பகுதிக்கு பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், இதில் பாம்புபிடிக்கும் செயல்முறைகள், பாம்புகடித்தால் அந்த விஷத்தை கட்டுப்படுத்தும் விதம் குறித்தும் மேற்கு தொடர்ச்சி மலை வனஉயிரின பாதுகாப்பு அறக்கட்டளையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.