ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்று சொல்வார்கள். உடல் ரீதியான உறுதியில் ஆண் வலியவன் என்றால், மன ரீதியான உறுதியில் பெண் வலியவள். பழங்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல பெண்களை அனுமதிக்காத சமூகம் தற்போது விண்வெளிவரை செல்ல அனுமதித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களின் தடங்களைப் பதித்து சாதனை படைத்து வருகின்றனர்.
இயற்கை கொடை வள்ளலான வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் ஆண்கள் மட்டும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு வனத்துறையில் பெண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற வனத்துறைக்கான நேரடி நியமன தேர்வில் தமிழ்நாடு முழுவதும் வனக்காவலர், வனகாப்பாளர், வனவர், வனச்சரகர் பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் கோவை வனக் கோட்டத்தில் 63 பெண்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். வனக்காவலர்கள், வனகாப்பாளர், வனவர் என 63 பேர் கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச் சரகங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்வது, அலுவலக பணிகள் மேற்கொள்வது, நீதிமன்றப் பணிகள் மேற்கொள்வது என அனைத்து பணிகளிலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது தவிர அதிநவீன இருசக்கர வாகனங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது, வனப்பகுதிக்குள் ரோந்து செல்வது என தொடர்ச்சியாக ஆண்களுக்கு நிகராக தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பணியில் சேர்ந்துள்ள வனக்காப்பாளர் நந்தினி கூறுகையில் ”பொறியியல் பட்டதாரியான, தான் இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் வனக்காப்பாளர் பணிக்கு வந்துள்ளதாகவும், பல்வேறு சவால்கள் நிறைந்த இந்தப் பணி தனக்கு திருப்தி அளிப்பதாகவும், வன விலங்குகளால் ஆபத்து இருந்த போதும் எந்த ஒரு அச்சமுமின்றி தங்களுடைய பணிகளை செய்து வருவதாகவும், தங்களுக்கு துறையிலுள்ள மற்ற ஆண்கள் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்குவதாகத் தெரிவித்தார்”.
இதுகுறித்து, ”மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், தற்போது அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. அதே போல் வனத்துறையில் அதிக அளவில் தற்போது பெண்கள் சேர்ந்துள்ளனர். கோவை வனக் கோட்டத்தில் உள்ள ஏழு வனச் சரகங்களில் 63 பேர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக நீதிமன்றப் பணிகள் மேற்கொள்வது, வனப்பகுதிக்கான வரைபடங்கள் தயாரிப்பதில் பெண் பணியாளர்கள் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது 11இடங்களுக்கான வரைபடங்களை இவர்கள் தயாரித்துள்ளனர். பெண் குற்றவாளிகளை விசாரணை செய்ய இவர்கள் இல்லாத சூழலில் காவல் துறையைச் சேர்ந்த பெண்களை அழைத்துக்கொண்டு பல்வேறு சோதனைகளுக்கு சென்ற நிலையில் தற்போது உள்ள பெண் வனக்காவலர்கள், வனக்காப்பாளர் கொண்டு சோதனைகளை எளிதில் செய்ய முடியும், வனத் துறையில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் இதேபோன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுதாக பங்கு எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:
சுற்றுலாப் பயணிகள் வருகையால் வால்பாறையில் கரோனா தொற்று பரவும் அபாயம்