கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி, தடாகம், மருதமலை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக மருதமலை வனப்பகுதியை ஒட்டி உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகம், சட்டக் கல்லூரி பகுதியில் இந்த யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அவசியமின்றி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், விறகு சேகரிக்கவும், இயற்கை உபாதையைக் கழிக்கவும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிட பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் ஷா என்ற தொழிலாளர் இன்று(ஜூலை 31) அதிகாலை 5.30 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, புதர் மறைவில் இருந்த ஒற்றை காட்டு யானை திடீரென மனோஜ் ஷாவை தாக்கியது. யானை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியதில் அவர் வயிறு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. குடல் சரிந்து கிடந்த மனோஜ் ஷாவின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.
மேலும், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் மனோஜை மீட்டு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிறு பகுதியில் யானை தந்தம் குத்தியதில் வயிறு கிழிந்து குடல் வெளியேறி இருப்பதையும், மார்பு பகுதியில் ரத்தம் உறைந்து இருந்ததையும் கண்டறிந்தனர். பின்னர், அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இந்நிலையில், மனோஜ் ஷாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவருக்கு O+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது. இது குறித்து உடன் இருந்த வனத்துறையினருக்கு மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ரத்த தானம் செய்ய யாராவது இருக்கிறார்களா? என அனைவரும் தேடி வந்தனர். அப்போது அங்கிருந்த, வனத்துறை தற்காலிக பணியாளரான பிரபாகர் என்பவர் ரத்த தானம் செய்ய முன்வந்தார். அவர் உடனடியாக மனோஜ் ஷாவிற்கு ரத்தம் கொடுத்து உதவினார். இதையடுத்து காயமடைந்த பீகார் தொழிலாளிக்கு மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர்.
இதையும் படிங்க: காட்டு யானையுடன் செல்பி - 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்!