கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே வனவிலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கிராமப்புறங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் ஆனைமலை குளத்தூர் கிராமத்திலுள்ள தோட்டத்தில், கன்னி வைத்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, இறைச்சிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், பாலகிருஷ்ணன், நாராயணன் ஆகியோரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மூவரும் இணைந்து வனவிலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. பின் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், முருகானந்தனுக்கு ரூ.20 ஆயிரமும், பாலகிருஷ்ணன், நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.