கோவை தெற்குத் தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி. ரவி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காகத் தினமும் பொய்களைச் சொல்லிவருகிறார் என்றும், ஸ்டாலின் இந்துக் கடவுள்களை மட்டும் இழிவுபடுத்திவருவதோடு, வேல் விவகாரத்தில் நாடகமாடிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு, ஜல்லிக்கட்டுக்குத் தடை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், கட்டப்பஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். தமிழ்நாடு முன்னேற இபிஎஸ்-மோடி என்ற இரட்டை இன்ஜின் தேவை என்றார்.
மேலும், கோவை தெற்குத் தொகுதியில் மக்களின் நாயகனுக்கும், திரை நாயகனுக்கும் இடையே போட்டி நடப்பதாக நயமாகச் சொன்ன அவர், மக்களின் நாயகன் வெற்றிபெற வேண்டும் என்றால் மக்கள் வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் நிலம் கையகப்படுத்துதல் முடிந்த பின்னர் தொடங்கப்படும் எனச் சொன்ன சி.டி. ரவி, கள நிலவரத்திற்கும் கருத்துக் கணிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது எனக் கூறினார். நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம் என்றார்.
இதையும் படிங்க: வாக்குச் சேகரிப்பின்போது நடனமாடிய எஸ்.பி. வேலுமணி