கோவை: கேரளாவில் தனியார் உணவகம் ஒன்றில் கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் சிக்கன் 'ஷவர்மா' சாப்பிட்ட கேரள மாணவி ஒருவர் உயிரிழந்தார். பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஷவர்மா தயாரிப்பதற்கு கெட்டுப்போன கோழிக்கறி பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலம் முழுவதும் சிக்கன் உணவு தயாரிப்பு உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எட்டு குழுவாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வ.உ.சி. பூங்காவை ஒட்டிய கடைகளில், சிக்கன் ஷவர்மா விற்பனை நடைபெறும் கடைகளில் , உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 'டென்மார்க்' மற்றும் 'தி மெஜஸ்டிக்' ஆகிய இரு கடைகளில், கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியில் இருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவையும், பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
இந்த கடைகளில் இருந்து சிக்கன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து விளக்கமளிக்க கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தரமற்ற நிலையில் சிக்கன் - 10 ஷவர்மா கடைகள் மீது அதிரடி நடவடிக்கை!