விமான பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு அலாதியான மகிழ்ச்சி தரக்கூடியது. மேலும் அதிகமான கட்டணம், பணக்காரர்கள் பயணிக்கும் வாகனம் எனப் பலர் நினைக்கின்றனர். சிலர் விமானத்தில் பயணம் செய்வதையே தங்கள் வாழ்நாள் விருப்பமாகக் கூட வைத்திருக்கின்றனர்.
ஏழைக் குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் என்பதெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே இன்றும் இருந்து வருகிறது. அதை முறியடிக்கும் வகையில் சென்னையில் நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு, வி.ஜி.பி தமிழ்ச்சங்கம் மற்றும் பார்க் கல்வி குழுமத்துடன் இணைந்து ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த 25 குழந்தைகள், மற்றும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி, திருநங்கை சிறுமி ஆகியோரை தேர்வு செய்து, விமானம் முலம் சென்னையிலிருந்து கோவை வரை அழைத்து சென்றனர். குழந்தைகள் சென்னை விமான நிலையத்தில் காலை உணவை முடித்த பிறகு விமானத்தில் முதன்முறையாக ஏறி மகிழ்ச்சி அடைந்தனர். ஏ ஆர் ரகுமானின் சகோதரி, இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹானா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்தனர்.
கோவை வந்தடைந்த குழந்தைகளைத் தன்னார்வ அமைப்பினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜி டி கார் மியூசியம், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். அதனைத் தொடர்ந்து கோவையில் இரவு உணவை முடித்துவிட்டு ரயில் மூலமாகச் சென்னை திரும்புகின்றனர்.
நீண்ட நாள் ஆசை நனவாகியிருக்கிறது, வானவெளியில் உயரத்தில் பறந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இன்னொரு முறை விமானத்தில் பறக்க வேண்டும் எனத் தோன்றியதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பை பொறுக்கிய திமுக!