நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், கூலித்தொழிலாளி. இவர் மனைவி வனிதாமணி (37). இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், வனிதாமணி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். "நமக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளதால், இந்தக் கருவை கலைத்து விடலாம்" என்று, வனிதாமணி முடிவெடுத்தார். அதற்கு கணவரும் சம்மதித்ததையடுத்து, வடசித்தூரில் உள்ள ஹோமியோபதி டாக்டர் முத்துலட்சுமியை வனிதாமணி அணுகியுள்ளார்.
இதையடுத்து, வடசித்தூரில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி மருத்துவமனைக்கு கணவர் செல்வராஜ் உடன் வனிதாமணி நேற்று சென்றுள்ளார். அங்கு வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வனிதாமணி உடல்நிலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வனிதாமணி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வனிதாமணி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் வனிதாமணி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து செல்வராஜ், நெகமம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவான டாக்டர் முத்துலட்சுமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், ஐந்து மாத கர்ப்பிணி, கருக்கலைப்பு ஊசி போட்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.