கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக ரப்பர் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பழைய டயர்களை வாங்கி புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை (சனிக்கிழமை) அப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. அந்த தீயானது பாலகிருஷ்ணன் தொழிற்சாலை முன்பு வைக்கப்பட்டிருந்த டயர்களிலும் பரவியது. இதனால் ரப்பர் டயர்களில் தீ பரவி, கடுமையாக எரிந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. பலர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து சூலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் டயர்களில் பற்றி எரிந்த தீயை ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அணைத்தனர். இந்த தீ விபத்தில் சில லட்சம் மதிப்புள்ள டயர்கள் எரிந்து நாசம் ஆனதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாலையில் சென்ற வேனில் திடீரென்று தீ விபத்து - ஓட்டுநர் காயம்!