பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாத்தி வனச்சரகம் கோழிக்கமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு 26 வளர்ப்பு யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானைகளில், கலீம், சுயம்பு, மாரியப்பன், கல்பனா போன்ற யானைகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, கும்கியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளைப் பிடிக்க, இந்த கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கல்பனா என்ற 41 வயது பெண் யானைக்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. நேற்று (செப்.21) காலை சிகிச்சை பலனின்றி கல்பனா யானை உயிரிழந்தது.
இதையடுத்து கல்பனா யானைக்கு வனத்துறையினர் மற்றும் மாவுத்து யானைப் பாகன்கள் அஞ்சலி செலுத்திய பின் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
உயிரிழந்த கல்பனா கடந்த 2017ஆம் ஆண்டு ஆழியார் அடுத்த குரங்கு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு யானைச் சவாரிக்காக பயன்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
டாப்சிலிப்பின் செல்ல யானை எனப்படும் கல்பனா யானை உயிரிழந்தது, வனத்துறையினர் மத்தியிலும், பொள்ளாச்சி பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.